அஜித்குமார், த்ரிஷா , அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது.
இதுவரை அஜித், த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட முக்கியமான நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருந்த நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதில் இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே டப்பிங் பணிகளும் முழு வீச்சில் நடந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அஜித் மற்றும் த்ரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் நேற்றோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதனை அஜித்திற்கு நன்றி தெரிவித்து மிகிழ் திருமேனி எழுதிய குறிப்பை படக்குழு வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்த குறிப்பில் மிகிழ் திருமேனி எழுதியிருந்ததாவது, “படப்பிடிப்பின் இறுதி நாள். உங்களுக்கு எனது எல்லையற்ற அன்பும் நன்றியும். நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும் ஊக்கம் கொடுக்கும் நபராகவும் இருந்துள்ளீர்கள். மொத்த படக்குழுவும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில், முதல் நாள் படப்பிடிப்பு முதல் கடைசி நாள் படப்பிடிப்பு வரை நீங்கள் எனக்கு அளித்த அன்பு, அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி சார்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.