பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வணங்கான்'. இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. டீசர் பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்பு ஜூலையில் வெளியாகும் என அறிவித்தார்கள். ஆனால் கடந்த 8ஆம் தேதி படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் விரைவில் படம் வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் என்பவர், வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே தான் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அந்தத் தலைப்புக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் பாலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வணங்கான் என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளதென 2022ஆம் ஆண்டே மனுதாரருக்கு தெரியும். ஆனால் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர் 2 ஆண்டுகள் கழித்து இப்போது படம் வெளியாகக்கூடிய சமயத்தில் பணம் பறிக்கக்கூடிய நோக்கில் கடைசி நேரத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்” எனக் குற்றம் சாற்றினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்தப் படத்தின் தலைப்புக்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது. அதனால் இந்தப் படத்தை பயன்படுத்தவும் வெளியிட தடை விதிக்கவும் கோரிய வழக்கை ஏற்க முடியாது எனக் கூறினார். அதன் பின்பு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.