தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தன்னுடைய கவித்துவமான எழுத்துக்களால் பல பாடல்களை எழுதி சிறந்த பாடலாசிரியராக தமிழில் இருந்து வருகிறார். பாடல்களோடு மட்டுமல்லாது இவரது கவிதைகள், நாவல்கள் என இலக்கிய தளத்தில் பயணித்து வருபவர். இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ தமிழக நாவல் வாசிப்பாளர்களால் பாராட்டு பெற்ற புத்தகமாகும். இந்த நாவல் தற்போது தமிழைத் தாண்டி பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாடமி வெளியிடுகிறது.
இதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பஞ்சாபி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம். உலகில் 12 கோடி மக்களால் பேசப்படும் பெருமொழி பஞ்சாபி, பரீதுதீன் முதல் அம்ரிதா ப்ரீத்தம் வரை 11 நூற்றாண்டுகள் செழுமைப்படுத்தப்பட்டது. பஞ்சாபின் பஞ்ச நதிகளோடு வைகை சங்கமிப்பது பெருமை. மொழிபெயர்ப்பு மஞ்ஜித் சிங். நன்றி சாகித்ய அகாடமி” என்று பதிவிட்டுள்ளார்.