Skip to main content

''இந்தியர்களின் பெருமையை நீங்கள் அங்கு உயர்த்த வேண்டும்'' - வைரமுத்து வேண்டுகோள்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது கவிப்பேரரசு வைரமுத்து வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

vsdgv

 

"கடல் கடந்து தவிக்கும் இந்தியச் சொந்தங்களே, தமிழ் ரத்தங்களே, தொழிலாளர் தோழர்களே வணக்கம். நாடு பிரிந்து, வீடு பிரிந்து, ஊர் பிரிந்து, உறவு பிரிந்து கடல் கடந்து நீங்கள் உழைக்கச் சென்றீர்கள். உங்கள் வியர்வையால் அந்தந்த நாட்டை வளப்படுத்தினீர்கள். ஆனால், இப்போது சூழ்நிலைக் கைதிகளாய் துயர்ப்படுகிறீர்கள். அது உங்கள் பிழையல்ல. அந்தந்த நாட்டு அரசுகளின் பிழையுமல்ல. இது காலத்தின் பிழை. இயற்கை மனிதனுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் பெரும் போரில் நாமும் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இதைப் பொறுமையால் வெல்வோம், கட்டுப்பாட்டால் வெல்வோம், சகிப்புத்தன்மையால் வெல்வோம். அந்தந்த நாட்டுச் சட்டங்களை நீங்கள் மதிக்க வேண்டும். இந்தியர்களின் பெருமையை நீங்கள் அங்கு உயர்த்த வேண்டும். தமிழர்களின் சகிப்புத்தன்மைக்கு நீங்கள் சாட்சிகளாய் திகழ வேண்டும். பொறுமையாய் இருந்தால் எதையும் வெல்லலாம். தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்.

 

nakkheeran app


 

 

நீங்கள் எல்லாம் தாய்நாட்டுக்குத் திரும்பி வர வேண்டுமென்று, வீடு தவிக்கிறது. பெற்றோர்கள் தவிக்கிறார்கள். உங்கள் உறவுகள் தவிக்கின்றன. உங்கள் நட்பு தவிக்கிறது. உங்கள் காதலி உங்களுக்காக காத்திருக்கிறாள். கண்ணீரோடு வந்து சேருங்கள், விரைவில் வருவீர்கள். அதுவரை பொறுமையைக் கட்டிக்காப்பது உங்களுடைய கடமை என்று நான் நினைக்கிறேன். வளைகுடா நாடுகளில் மட்டும் 28 லட்சம் இந்தியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூரில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும், குறிப்பாக தமிழர்களும் துயர்பட்டுக் கிடக்கிறீர்கள். இரண்டு நாடுகளின் அரசுகளும் ஒரு பொருத்தமான காலத்தில் உங்களை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்களும் உங்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அருள்கூர்ந்து அமைதி காக்க வேண்டும். அன்பு கொண்டு பொறுமை காக்க வேண்டும். வெல்வது நிச்சயம், நீங்கள் தாயகம் வருவது சத்தியம்" என்று வைரமுத்து கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்