இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பெரிய நடிகர் படங்களுக்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 9 மணி சிறப்பு காட்சியுடன் வெளியான கங்குவா கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இது தொடர்பாக ஜோதிகா, “கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சில கோரிக்கைகள் வைத்திருந்தார். அதில் “மற்ற மாநிலங்களிலும் சிறப்புக் காட்சிகளை 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். படம் வெளியாகிய இரண்டு வார காலத்துக்கு படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படங்களை அதிகாலையிலேயே பார்த்துவிட்டு, தமிழகத்தில் திரைப்படம் போடப்படுவதற்கு முன்னரே விமர்சனம் என்கிற பெயரில் யூடியூப் மூலமாக காலி செய்கின்றனர். தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என யூடியூப்பர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது” என ஆடியோ வெளியிட்டார். இதையடுத்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் படக்குழுவினர் மீது தனிப்பட்ட தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. மேலும் எந்த யூட்யூப் சேனலும் பார்வையாளர்கள் ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது எனக் கூறியது.
இதையடுத்து விமர்சன விவகாரம் குறித்து பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமி, காக்கா பட இசை வெளியீட்டில் பேசியதாவது, “விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விமர்சனத்தை யாரும் தடுக்க முடியாது. ஒரு படைப்புக்கு விமர்சனம் கண்டிப்பாக தேவை. அதை கட்டுப்படுத்த நினைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். அப்படி நினைக்கவும் கூடாது. விமர்சனம் தான் நமது அடுத்த படைப்புக்கு ஊக்கம். அதுதான் உரம். ஆனால் நம்ம திரையுலகம் எதை பார்த்து அச்சப்படுகிறது என்றால் விமர்சனம் என்கிற பெயரில் வருகிற அவதூறைத் தான். இன்றைக்கு இருக்கும் இணையதள வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டியது இருக்கு.
ரிவியூவில், நெகட்டிவுவ் ரிவியூவர் பாசிட்டிவ் ரிவியூவர் என வெவ்வேறு வகைகளில் அவர்களை பிரிக்கிற அளவிற்கு பெருகிவிட்டார்கள். நான் சிறுவயதாக இருக்கும் போது, எனது பாட்டியுடன் ஒரு படம் பார்த்தேன். அந்த படம் பாட்டிக்கு பிடிக்கவில்லை. வெளியே வந்ததும் பாட்டியை பார்த்து ஒருவர் படம் எப்படி இருக்கு என கேட்க அதற்கு ஒரு தடவை பார்க்கலாம் என பாட்டி சொன்னார். உடனே பாட்டியிடம் உனக்குத்தான் பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் ஒரு தடவ பார்க்கலாம்னு சொன்ன என நான் கேட்டேன். அதற்கு எங்க பாட்டி, யாரும் சரியாக எடுக்கக்கூடாது என நினைத்து படம் எடுப்பதில்லை. அவர்களுக்கு தோணுவதை எடுத்திருக்கிறார்கள். அது சரியாக வரவில்லை. அவர்களுக்கும் குடும்ப குட்டிகள் இருக்கிறது. அவங்களுக்கு சினிமாதான் தொழில். படம் நல்லாயில்லை என பார்க்க வருகிறவர்களிடம் சொன்னால் திரும்ப போய்விடுவார்கள். இந்த படத்தில் சரியா எடுக்காதவர்கள் அடுத்த படத்தில் சரியாக எடுக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். எதையாவது சொல்லி அவர்கள் குடும்பத்தில் கெட்டது செய்துவிடக்கூடாது என்றார். உலகத்தில் தர்மமான விமர்சனப் பார்வை என்பது இதுதான்.
ஒரு திரைப்படத்தை முடக்குவது மூலமாக ஒரு படைப்பாளியை ஒடுக்குவதன் மூலமாக குறிப்பாக தயாரிப்பாளர்களை ஒடுக்குவதன் மூலமாக அவர்கள் அடுத்தடுத்து படங்கள் எடுக்க முடியாமல் போகிற நிலைமைக்கு போய்விடுகிறது. உலகத்திலேயே சினிமாவில் மட்டும்தான் சிறு தோல்வியை சந்தித்தால் அந்த தோல்விக்கு காரணமானவர்கள் திரும்பி எழுவதற்கு 5 வருஷம் ஆகும். இதில் எழுந்திருக்காமல் போனவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அசோசியட் டைரக்டராக இருந்துவிட்டு படம் இயக்கி பின்பு தோல்வியால் மீண்டும் அசோசியட் டைரக்டாக வேலை பார்ப்பது மிகக் கொடுமையானது. அது எனக்கு புரியும். ஏனென்றால் நான் முதல் படத்தில் தோல்வியை பார்த்தவன். எல்லோருமே மனிதர்கள். மற்றவர்களை வாழவைப்பதற்காக பிறந்திருக்கிறோம். அதனால் விமர்சனத்தை முடக்குவது, தியேட்டர் வாசலில் ரசிகர்ளிடம் கருத்து கேட்பதை தவிர்க்க வேண்டும் என சொல்வது சரியான முடிவு இல்லை. ஒவ்வொரு விமர்சகர்களும் சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் படத்தை விமர்சனம் செய்ய வேண்டும். விமர்சனம் மட்டும்தான் ஒரு கலையை செழிக்க வைக்க முடியும்” என்றார்.