Skip to main content

"ஒரு நகைச்சுவை கடைசியாய் அழவைத்துவிட்டது" - வைரமுத்து இரங்கல்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

vairamuthu about manobala

 

பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறைமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோஸ்டி' படம் வெளியானது. அதன் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வந்தார்.

 

இந்த சூழலில் அவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலா மறைவு குறித்து அவரது மகன் ஹரிஷ் மனோபாலா, "இந்த வருட தொடக்கத்தில் இருந்தே உடல்நலம் சரியில்லாமல் தான் இருந்தார். கொஞ்சம் நெஞ்சு வலி இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். நல்லா தேறி வந்துட்டு இருந்தார். கடைசி ஒரு 1 வாரத்தில் அப்பாவின் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. பிஸியோ எல்லாம் பண்ணிட்டு இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென்று இறந்துள்ளார்" என்றார். மேலும் நாளை (04.05.2023) காலை 10 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறுவதாக தெரிவித்தார். அவரது உடல் வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வைரமுத்து, "ஒரு நகைச்சுவை கடைசியாய் அழ வைத்துவிட்டது. மரணத்தின் இறுதிவரை இயங்கிக்கொண்டிருந்த மனோபாலா இன்று இல்லை. திரையின் எல்லாத் துறைகளிலும் இயங்கியவன்; எல்லாரோடும் பழகியவன் இனி இல்லை. ஒல்லியாய் இருப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என்ற மனிதக் கணக்கை மரணம் உடைத்துவிட்டது" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயக்குநர்கள் அ.வினோத், சுசீந்திரன், ஏ.எல். விஜய், சேரன் மற்றும் சந்தான பாரதி, நடிகர் ராதா ரவி, சிவகுமார், ஆர்யா உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ட்விட்டர் பக்கம் வாயிலாக லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், விஷால், ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பலரும் இரங்கல் பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்