Skip to main content

புயல் பாதிப்பு; அரசு நடவடிக்கைகள் குறித்து வடிவேலு

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
vadivelu about tn government

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் மிக்ஜாம் புயலில் காணாமல் போன மரங்களுக்கு ஈடாக 5000 மரங்கள் கொடுக்கும் விழா நடந்தது. அதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் வடிவேலு கலந்து கொண்டு பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் அரசு நடவடிக்கைகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுவரை கிட்டதட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் மரங்கள் நட்டிருக்கிறார். இன்றைக்கு 5 ஆயிரம் மரத்தை என்னுடைய தலைமையில் துவக்கி வைக்க சொல்லி அழைத்தார். ரொம்ப சந்தோஷமாக வந்து மரத்தை நட்டுவிட்டு மனம் நெகிழ்ந்து வீட்டுக்கு போறேன். இதில் கலந்துகிட்டது ரொம்ப பெருமையாக உள்ளது. 

நிவாரண பணிகளை அரசு அழகாக சிறப்பாக கையாண்டு வருகிறது. மக்களுடைய வேதனை முதல்வருக்கும் இருக்கிறது. அந்த வலியை அவரும் உணர்கிறார். எல்லா அமைச்சர்களும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி... அங்கு போய் வேலை பார்க்கின்றனர். இந்த முறை உயிர் சேதம் அதிகம் இல்லாதவாறு பண்ணியிருகிறார்கள். அது பெரிய விஷயம். இது மாதிரி எதிர்பாராத மழை நிறைய வரும் என்கிறார்கள். அதற்கு நாம் எல்லாரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நாம் எச்சரிகையாக இருக்க, அரசு நிறைய உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. விமர்சனம் வந்துகொண்டு தான் இருக்கும். கலைஞரை திட்டாதவர்கள் எத்தனை பேர். திட்டுகிறவர்கள் திட்டிகிட்டே இருக்கட்டும். அரசாங்கம் அதன் கடமையை சரியாக செய்துகொண்டு தான் வருகிறது” என்றார். 

சார்ந்த செய்திகள்