21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர்த்தொழில், ராவணக் கோட்டம், சாயவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், உடன்பால் மற்றும் விடுதலை பாகம் 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
இதில் மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. மேடையில் பேசிய அவர், “அழுகிற சீனெல்லாம் இப்போது ஒர்க்கவுட்டாகாது. அப்படி இருந்தும் மாமன்னன் படத்தை நீங்க பார்த்து ரசிச்சிருக்கீங்க. அதை எப்படி ஏத்துக்கிட்டீங்கன்னு புரியல. அழுததுக்கு விருது கொடுத்திருக்கீங்க. அதுதான் என்னுடைய வாழ்க்கையும் கூட. அது படம் அல்ல என்னுடைய வாழ்வியல். இந்த வெற்றி, மாரி செல்வராஜுக்கு சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் மாதிரி. இந்த வயசில் அவருடைய அனுபவம், நம்ம பட்ட கஷ்டத்தையெல்லாம் சொல்றாரு.
மாமன்னன் படத்தில் இருக்கிற எல்லா சீனையும் புரட்டி போட்டு பார்த்தா, எல்லாமே காமெடி சீனாத்தான் இருக்கும். இதை மாரி செல்வராஜே என்னிடம் சொன்னார். இப்போ இருக்கிற டைரக்டர் எல்லாம், நடிகர்கள் சத்தமா பேசுனா, நம்ம உடல் மொழியில் கத்தாம மெல்ல ஆக்ட் பண்ணு எனச் சொல்கின்றனர். எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நம்ம உடல் மொழிதான் ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம கலவை இல்லாத இடமே இல்லை என்கிறபோது ரொம்ப சந்தோசமா இருக்கு.
ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன். வர கதையெல்லாம் சோக கதையா இருக்கு. ஒரே அழுகை. அதனால் ஒரு 5 வருஷம் கழிச்சு இது மாதிரி கதையை பார்ப்போம் என முடிவெடுத்துள்ளேன். மாமன்னன் படத்தில் டைரக்டர் அவருடைய வலியையும் சொல்லியிருந்தார். ஏழை மக்களின் வலியையும் சொல்லியிருந்தார். அந்த கதைக்கு விருது வாங்கினது ரொம்ப பெருமை” என்றார்.