பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது.
இது தொடர்பாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப் பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ படம் திரையரங்கில் திரையிடும்போது ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமான படத் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.