அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘ஐசி 814: காந்தகார் ஹைஜாக்’. இத்தொடர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 29ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸில் வெளியானது. இதில் அரவிந்த் சுவாமி, நசிருதீன் ஷா, பங்கஜ் கபூர், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814, கடந்த 1999ஆம் திரிபுவனிலிருந்து டெல்லி வரை சென்ற போது பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கடத்தினர்.
மேற்கண்ட சம்பவத்தை வைத்து உருவாகிய இத்தொடருக்கு எதிராக பா.ஜ.க.வின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா, விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் முஸ்லிம் அடையாளங்களை மறைக்க மாற்றுப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பு இந்துக்கள்தான் விமானத்தை கடத்தியவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்று கூறியிருந்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கங்கனா ரனாவத், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கு மட்டும் இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க சுதந்திரமிருப்பதாக இத்தொடருக்கு எதிராக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதைத் தொடர்ந்து நெட் ஃபிளிக்ஸ் தலைமை அதிகாரிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. மேலும் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் ‘பேன் நெட்பிளிக்ஸ்’ என்று ஹேஸ்டேக்கை இத்தொடருக்கு எதிராக ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது நெட் ஃபிளிக்ஸ் தலைமை அதிகாரி இதற்கு பதில் தெரிவித்துள்ளார். அதன்படி மக்களின் உணர்களை மதிப்போம், முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வெளியிடுவோம் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் நேரில் ஆஜராகி உறுதியளித்துள்ளார்.