லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகத் தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே லியோ படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், 19 ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சியை 4 மணிக்கே திரையிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்தது நீதிமன்றம். மேலும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் குழு 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டி உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுத்தனர். மனுவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்த உள்துறை செயலாளர் அனுமதி தர மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி லியோ படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விஜய், லோகேஷ் கனகரராஜ், அனிருத், ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எல்சியு என்ற ஹேஸ்டேக்கை பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ், அவர் இயக்கிய கைதி படத்தின் கதையை விக்ரம் கதையுடன் தொடர்பு படுத்தி ஒரு யுனிவர்ஸை உருவாக்கியிருந்தார். அதனை ரசிகர்கள் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' எனக் குறிப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் லியோ படம் அந்த யுனிவர்சில் வருமா என்ற சந்தேகம் நீடித்து வந்த நிலையில் தற்போது உதயநிதி பதிவால் அது உறுதியாகியுள்ளது போல் தெரிகிறது.
Thalabathy @actorvijay Anna’s #Leo 👍🏽👍🏽 👍🏽@Dir_Lokesh excellent filmmaking , @anirudhofficial music , @anbariv master @7screenstudio 👏👏👏#LCU 😉! All the best team !— Udhay (@Udhaystalin) October 17, 2023