Skip to main content

'இந்த படத்தின் வெற்றி, தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால்..' - உதயநிதி ஸ்டாலின் 

Published on 19/02/2019 | Edited on 19/02/2019
udhayanidhi

 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் நாயகன் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது.... 

 

 

"இதற்கு முன்பு என் பல படங்களின் பல பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பல விஷயங்களைப் பேசினேன். ஆனால் இன்று இது ஒரு நல்ல படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவருக்கும் நான் நன்றியை கூறுகிறேன். ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவும் மிகச்சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என ஒவ்வொருவரும் மிகச் சிறந்த விஷயங்களை அளித்திருக்கிறார்கள். என் குழந்தை பருவ தோழியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வசுந்தரா நடித்திருக்கிறார், மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. குறைந்தபட்சம்  வருடத்திற்கு ஒரு முறை சீனு ராமசாமி சார் படங்களில் தமன்னா நடிக்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் பெண்களை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். பாரதி கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் இறுதியில் எனக்கும் வடிவுக்கரசி அம்மாவுக்கும் ஒரு உணர்ச்சிகரமான காட்சி இருக்கிறது. அது மறக்க முடியாதது. முழு படப்பிடிப்பும் முடிந்த பிறகு தான் பாடல்கள் இசையமைக்கப்பட்டன. இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கண்ணே கலைமானேவின் வெற்றி அல்லது தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நான் இன்னும் ஒரு படத்தில் சீனு சார் உடன் இணைந்து பணியாற்றுவேன். மனிதன் மற்றும் நிமிர் படங்களுக்கு பிறகு என்  கேரியரில் இந்த படம் பாராட்டப்படும் ஒரு படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்