கர்நாடக சங்கீதத்தில் கோலோச்சியவர் பிரபல பின்னணிப் பாடகி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. இசை ரசிகர்களால் எம்.எஸ் சுப்புலட்சுமி என அறியப்படும் இவர், சிறுவயதிலேயே கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகியவைகளை கற்றுக் கொண்டார். பின்பு தனது தாயின் கச்சேரியில் பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து அவரது அம்மாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னையில் கச்சேரி நடத்திய எம்.எஸ் சுப்புலட்சுமி திரைப்படங்களில் நடிகையாகவும் அறிமுகமானார். சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு, விலகிய அவர், இந்திய கலாச்சார தூதராக, லண்டன், நியூயார்க், கனடா என உலகம் முழுவதும் இசை கச்சேரிகள் நடத்தினார்.
இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பாரத் ரத்னா விருது வாங்கிய முதல் பாடகர் என்ற பெருமையை எம்.எஸ் சுப்புலட்சுமி பெற்றார். மேலும் பத்ப பூஷன், பத்ம விபூஷன், இந்திரா காந்தி விருது என பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 2004 டிசம்பர் 11 அன்று மறைந்தார். இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெங்களூருவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
2025 இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் எம்.எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் த்ரிஷா, நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய நடிகைகளில் யாராவது ஒருவர் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.