கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான படம் தோழா. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெளியீட்டின் போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற தூத்துக்குடி போலீசார் போஸ்டர் ஒட்டியதற்காக கார்த்தி ரசிகர் மன்றத்தினரிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தர மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் மன்றத்தின் தலைவர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகிய மூவர் மீதும் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக கார்த்தி ரசிகர் மன்றத்தின் சார்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், இந்த விவகாரத்தில் போலீசார்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு ரூ. 5 லட்சமும், வெங்கடேஷ் மற்றும் சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 போலீசாருக்கும் தலா ரூ. 2 லட்சம் அபராதம் விதித்ததுடன் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.