மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி.பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி.எஸ்.மித்ரன், லெனின் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். யாரும் எதிர்பாராதவண்ணம் சமூக செயல்பாட்டாளரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் கலந்துகொண்ட திருமுருகன் காந்தி, தனது உரையில் நடிகர் விஜய் சேதுபதிதான் தனக்குப் பிடித்த நடிகர் என்று குறிப்பிட்டார். விஜய் சேதுபதியை பாராட்டி அவர் பேசியது...
"அண்மைக்காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார். ஒரு பேட்டியில் தொடர்ந்து அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கேள்வி வந்தது. 'உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?' என்று. ஒரு நிமிடம் வியந்தாலும், உடனே சொன்னேன் "விஜய்சேதுபதி" என்று. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார். இன்றைய சமகால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்களோ, எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்பவராக விஜய்சேதுபதி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்த தருணத்தில் நான் பார்க்கிறேன். இன்றைய சினிமாவில் வரக்கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவே இருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார். அதனாலேயே அனைவராலும் நேசிக்கக்கூடிய கலைஞராக முடிகிறது."