விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக காட்சி இடம்பெற்றது. மத வெறுப்பை தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த நிலையில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நேற்று (05.05.2023) இப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தீவிர சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர். ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கலவையான விமர்சனமே பெற்று வருகிறது. நேற்று முதல் நாளில் இப்படம் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. இதனை பிரதமர் மோடி ஆதரிப்பது, அவர் அப்படத்தின் தயாரிப்பாளரா அல்லது இயக்குநரா என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்படத்தைத் திரையிடுவதற்கு தமிழ்நாட்டில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்படத்தைத் திரையிட தொடர்ந்து அனுமதிப்பது தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்க வழிவகுத்து விடும். எனவே, உடனே இதற்கு தடை விதிக்க வேண்டுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
#த_கேரளா_ஸ்டோரி எனும் திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. இதனை @PMOIndia அவர்கள் ஆதரிப்பது, அவர் அப்படத்தின் தயாரிப்பாளரா அல்லது இயக்குநரா என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்படத்தைத் திரையிடுவதற்கு தமிழ்நாட்டில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருப்பது… pic.twitter.com/vdI0ejjBPW— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 6, 2023