உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி சென்றுள்ளார். அங்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலுவலகத்திற்கு தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற முயன்றுள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தனக்கு டிக்கெட் இல்லை என கூறி தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அர்ச்சனாவிடம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு வி.ஐ.பி. டிக்கெட் ரூ.500 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊழியர்களுக்கும் தனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் ஒரு வீடியோ எடுத்துள்ளார் அர்ச்சனா. அதில் திருப்பதி தேவஸ்தானத்தில் இது போன்று நடப்பதை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு சேர்த்து, இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.