புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து, இயக்கி புதுமுகங்களின் நடிப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பொள்ளாச்சி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் இயக்குநரும், பெஃப்சி சம்மேளன தலைவருமான ஆர்.கே.செல்வமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய தொல்.திருமாவளவன் எம்.பி., "ஒரு திரைப்படம் என்ன பேசுகிறது என்பதை போல் அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுகிறதா என்பது இப்போது முக்கியமாகிறது. இந்தக் காலத்தில் சம உரிமை பற்றி, ஜாதி பற்றி பேசுவது அதிகரித்துள்ளது. ஆனால் பெண்கள் மீதான வன்முறை இன்றும் பேசப்படுவதில்லை. ஒரு பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து, அவள் படிப்பு அவள் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அவளது குடும்பமே தீர்மானிக்கிறது.
அந்த வகையில் இந்தியக் கலாச்சாரமே பெண்கள் அடங்கி நடக்கவே பழக்குகிறது. ஒவ்வொரு வீடுமே பெண்களுக்கு பொள்ளாச்சி தான். ஆனால் பொள்ளாச்சி பாலியல் வன்முறை பொதுவெளியில் வந்ததால் அதன் மீது வெளிச்சம் விழுந்துள்ளது. இந்தக் கதைகள் மீண்டும் மீண்டும் திரையில் பேசப்பட வேண்டும். இந்தக் கதையினை எடுத்திருக்கும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் படம் வெற்றி பெற வாழ்த்துகள்" தெரிவித்துள்ளார்.