இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி ஆகியோர் நடித்திருக்கும் படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் ராம், பா.ரஞ்சித் குறித்து பேசுகையில் ஒரு கவிதையை குறிப்பிட்டு அதனுடன் ரஞ்சித்தை ஒப்பிட்டார்.
"நான் படித்த கவிதையின் காட்சி ஒன்று எனக்கு நினைவுக்கு வருது. 'ஒரு தனித்த பனி இரவு, ஆளற்ற ஒரு சாலை, தூரத்தில் ஒருவர் வருகிறார், அவர் நீள அங்கி போட்ருக்கார். அந்த நீண்ட அங்கிக்குள் காயப்பட்ட ஒரு பறவை அழுதுகொண்டிருக்கிறது. அதன் அழுகுரல் ஒரு கைக்குழந்தையின் அழுகுரல் போல தெருவெங்கும் பரவியிருக்கிறது. அந்த நீண்ட அங்கியணிந்த மனிதனாகத்தான் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். அந்தப் பறவை எப்போதும் அழுதுகொண்டிருக்கும், இம்சிக்கும், முரண்படும், கலையை உருவாக்கும், வெற்றியும் பெறவைக்கும், ஆனால் அதை பா.ரஞ்சித் விடமுடியாது, அந்த அங்கியை கழற்ற முடியாது. அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம். ஒரு வேளை, நீண்ட நெடுங்காலம் நாம் வாழ நேர்ந்தால் அந்தப் பறவை நலம் பெற்று சமாதான வானில் சமமாகப் பறக்கும்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், "பா.ரஞ்சித்தின் அட்டகத்திக்கு பெரிய ரசிகன் நான். ஒரு எளிய சின்ன பையனாக சினிமாவுக்குள் வந்தது, வந்து சினிமாவில் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எல்லாம் கூட என்னைப் பொறுத்தவரை சாதரணமானதுதான். அப்படிப் பெற்ற வெற்றியையும் பொருளையும் மற்றவரோடு பகிர்ந்துகொள்வதுதான் அசாதாரணமானது. அதன் ஒரு சிறு துளிதான் இந்த நீலம் ப்ரொடக்ஷன்ஸும் பரியேறும் பெருமாளும்" என்று நெகிழ்ச்சியாக பேசினார்.