இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இருபதாயிரத்திற்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. இருப்பினும், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் என தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசுக்குப் பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளர் தாணு முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், நெருக்கடிகள் நிறைந்த இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாகக் கையாண்டு வருவதாகக் கூறி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.