இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இத்தேர்தலில் திரைப் பிரபலங்கள் ஹேமாமாலினி, கங்கனா ரனாவத், சுரேஷ் கோபி, மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் தங்கர் பச்சான், தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். மொத்தம் 2,05,244 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
இந்தந் இந்த நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், “எழுத்துக்கள், பேச்சுக்கள், திரைப்படங்கள் மூலமாக மக்களுக்கான அரசியலை பேசிக் கொண்டிருந்த எனக்கு தேர்தல் கள அரசியலில் செயலாற்றுவற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த இராமதாஸுக்கும், அன்புமணி இராமதாஸுக்கும் நன்றிகள். அதேபோல் கடலூர் நாடாளுமன்றம் தொகுதியில் பதிவான வாக்குகளில் 20% வாக்குகளான 205244 வாக்குகளை என் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கும்,அதற்கு உறுதுணையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் பெரும் நன்றியினை உரித்தாக்குகிறேன். என்னை வளர்த்தெடுத்த இம்மக்களுக்காக தொடர்ந்து என் அரசியல் குரலும், செயல்பாடுகளும், படைப்புகளும் இருந்து கொண்டே இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.