Skip to main content

"அரசியல் கட்சிகளை நம்ப வேண்டியதில்லை" - தங்கர் பச்சான் யோசனை

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Thankar Bachan about ar rahman concert issue

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் (10.09.2023) சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

 

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். சில பெண்கள் கூட்டத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததாகவும் அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். 

 

இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தங்களது டிக்கெட் நகலை பகிரவும் எனவும் குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சீனுராமசாமி, சுரேஷ் காமாட்சி, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில், தங்கர் பச்சான் அவரது எக்ஸ் தள பக்கத்தில், "ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும். 

 

இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை. இதுபோன்ற நிகழ்வுகளை மட்டும் பணமாக்க நினைக்கும் ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மக்களும் பொது நல சிந்தனையின்றி கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர். மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும். அதுவரை வெறும் புலம்பலிலேயே மக்கள் வாழ்வு முடிந்து போகும்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்