இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துவருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா 2வது அலை நாடு முழுவதும் பரவிவருவதால் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால், பான் இந்தியா படமான 'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்திருப்பதாகப் பட நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் 'தலைவி' படத்தின் தமிழ் பதிப்பிற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் இதன் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் சென்சார் தகவல்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.