நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்திவருகின்றனர்.
அந்த வகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான திவ்யதர்ஷினி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ள திவ்யதர்ஷினி, தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து முதலில் தனக்கும் தயக்கம் இருந்ததாகவும் பின் மருத்துவரின் வழிகாட்டுதல்படி கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.