Skip to main content

"பீஸ்ட் படத்தை தடை செய்க" - வெளிநாட்டை தொடர்ந்து தமிழகத்திலும் எதிர்ப்பு

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

tamilnadu muslim league letter home secretary vijay beast movie banned

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் இப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி குவைத் அரசாங்கம் பீஸ்ட் படத்திற்கு தடை விதித்துள்ளது.

 

இந்நிலையில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே பிரபாகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், "தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற தோற்றை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்கள் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம்பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புக்களை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்து வருகிறோம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைபடங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

2015 பெருவெள்ளத்தின் போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிளை யாரும் மறந்துவிட முடியாது. கரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள் தான். இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது. உண்மை நிலை இப்படி இருக்கும்போது, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து பீஸ்ட் படத்தின் கதை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளிவந்தால், இஸ்லாமியர்களிடையே ஒரு சுணக்கமான சூழல் ஏற்படும். ஆகவே அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, பீஸ்ட் திரைப்படம் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்