மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினர். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர். படத்தின் வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. மேலும் படத்தின் வெற்றியின் காரணமாக மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம். ஏ.ஆர். ரஹ்மான், தேனி ஈஸ்வர், வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகிறார் உதயநிதி.
அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்துவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இருப்பினும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் படம் சுத்த ஃபிளாப் என விமர்சித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி "மாமன்னன் படம் ஓடுனா என்ன, ஓடலன்னா என்ன.. இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? இதுவா வயிற்றுப் பசியை போக்கப் போகிறது" என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மாமன்னன் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்த தமிழிசை, கையெடுத்து கும்பிட்டு மெளனமாக சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.