Skip to main content

அமரன் ; சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

Published on 13/11/2024 | Edited on 13/11/2024
Tamil Nadu Film Exhibitors Association request amaran ott release postponed by 8 weeks

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. 

இதனிடையே இப்படத்தில் காஷ்மீர் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி காஷ்மீர் மக்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள் என பல்வேறு கேள்விகள் எழுப்பி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் திரைப்பட இயக்குநர்கள் வசந்த பாலன், கோபி நயினார் உள்ளிட்டோரும் படக்குழுவை விமர்சித்திருந்தனர். 

இந்த நிலையில் படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டை 8 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கைவைத்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், ரெட் ஜெயண்ட்நிறுவனம், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு, “தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அமரன்' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற உங்களை வாழ்த்துகிறோம். குடும்ப பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வரும் நல்ல உள்ளடக்கத்தின் உண்மையான பலத்தை உங்கள் படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது

திரையரங்க வெற்றியைப் போல எந்த வெற்றியும் திரைப்பட சகோதரத்துவத்திற்கு நல்ல விஷயமாக இருக்காது என்ற காலத்தால் சோதிக்கப்பட்ட கோட்பாட்டை இது நிரூபித்துள்ளது. அதே உணர்வில், பிளாக்பஸ்டர் திரைப்படமான 'அமரன்' திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் டிஜிட்டல் வெளியீட்டை குறைந்தது 8 வாரங்களுக்குத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வர்த்தகத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்ற வகையில், திரைப்படத்தின் திரையரங்கு பிரத்தியேகத்தை நீட்டிக்க, திரைப்படம் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறையின் நலனுக்காக நீங்கள் சாதகமான முடிவை எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெரிதாக்குவதுடன், எதிர்கால படங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்கும்” என கடிதம் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்