உலக சினிமா ரசிகர்களிடையே டான் படங்கள் என்றாலே கொஞ்சம் அலாதி தான். அந்த வகையில் டான் படங்களின் வாசலை முதலில் திறந்து வைத்தவர் இயக்குநர் பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா. இவர் இயக்கத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான ’தி காட்ஃபாதர்’ ரசிகர்களை திரும்பிப் பார்க்கவைத்த முதல் டான் படம். பொதுவாக இந்த மாதிரியான படங்களில், தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்காக வேண்டியதை செய்வதே டான்களின் தலையாயக் கடமை. அது கொலையாக இருந்தாலும் சரி. இடையிடையே பகைகளுக்காக சில பழிவாங்கல்கள். இதே ஜானரில் வெளியானது தான் காட்ஃபாதர் படமும். இப்படத்தின் நடிகர் மார்லன் பிராண்டோ தனது நடிப்பால் ரசிகர்களை மிரட்டியிருப்பார். இதன் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து உலகில் உள்ள பல மொழிகளில் அவர்களுக்கு ஏற்றார் போல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப டான் படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாக்களில் வெளியான டான் படங்களையும், நம்மை மிரட்டிய டாப் ஃபைவ் டான்கள் யார் யார் என்று பாப்போம்.
நாயகன் (கமல்ஹாசன்) கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மும்பையை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டியிருப்பார். இப்படத்தில் கமல் பேசும் வசனமான, ”நாலு பேருக்கு நல்லதுன்னா ஏதும் தப்பில்ல" என்ற வசனம் இன்றளவும் புழக்கத்தில் இருந்து வருகிறது.
பாட்ஷா (ரஜினிகாந்த்) : கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் பாட்ஷா. இந்த படமும் கூட மும்பை கதைக்களத்தை மையமாக கொண்டே வெளியானது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அராஜகம் செய்து வரும் ரகுவரனை அழிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் டானாக மாறுவார். இப்படத்தில் ரஜினியின் வசன உச்சரிப்பும் ஸ்டைலும் பலரையும் கவர்ந்தது. அத்துடன், இப்படத்தில் ரஜினி பேசிய, ”நான் ஒரு தடவ சொன்னா, நுறு தடவ சொன்ன மாதிரி” என்ற வசனம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடிக்க பாஷாவையும், ரஜினியையும் தமிழக மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதை போன்று 1980 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது
பில்லா (அஜித்) : ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தை ரீமேக் செய்து நடிகர் அஜித் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அஜித் கோட் சூட்டுடன் ஸ்டைலாக மிரட்டியிருப்பார். இப்படத்தில் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. நடிகர் அஜித்துக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது.
விக்ரம் வேதா ( விஜய் சேதுபதி) : இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. சமகால எதார்த்த வாழ்வியலுடன் விஜய் சேதுபதிக்கே உரித்தான வசன உச்சரிப்பும், நடிப்பும் கலந்த கேங்ஸ்டர் படமாக வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதிபதி மாதவனிடம் ஒரு கதை சொல்லட்டுமா சார் என கேட்கும் வசனத்திற்கே பல ரசிங்கர்கள் உள்ளனர்.
ஜிகர்தண்டா (பாபி சிம்ஹா) : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் பலரையும் கவர்ந்தது. இந்த படத்தில் அசால்ட் சேதுவாக வரும் பாபி சிம்ஹா நடிப்பில் பலரையும் மெய் சிலிர்க்க வைத்திருப்பார். அத்துடன் இந்த படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.