இந்திய திரையுலகில் பிரதானமாக உள்ள தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு இளைஞர்களின் நாயகனாக இருக்கும் நடிகர் சூர்யாவுக்கு இன்று (ஜூலை 23) பிறந்தநாள். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தற்போது கோலோச்சி வரும் இவர் தன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை நேரில் சந்தித்து புதிய அனுபவங்களை கற்றுக்கொள்வது குறித்து பேசும்போது... "நாம குழந்தையாக இருக்கும்போது முதன் முதல்ல சைக்கிள் வேணும்னு ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேணும்னு அப்பாகிட்ட அடம்பிடிப்போம். அதுவும் எந்த மாதிரி பைக்னுகூட ஒரு ஐடியாவோட சுத்துவோம். அடுத்து கார். இப்படி வாழ்க்கையில புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும். அது அப்படியே கல்லூரி, வேலை, திருமணம்னு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கும். இந்தமாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வம் இப்போ நிறைய பேருக்கு குறையுதோன்னு தோணுது. லைஃப்ல ‘இது போதும்டா’னு சிலர் நினைக்கிறாங்க. ஈஸியா சலிப்படையவும் செய்றாங்க.
எப்பவுமே ஒரு புது அனுபவம் வைத்துக்கோங்க. நம்ம செய்ற வேலையில நாம தான் பெஸ்ட்டா இருக்கணும்னு மனசுல ஆழமா நினைங்க. என்னென்ன விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்க முடியுமோ கத்துக்கிட்டே இருங்க. லைஃப்ல ஒரு விஷயம் மட்டும் போதும்னு இங்கே இல்லை. இப்போ எல்லாம் சந்தோஷம் ரொம்ப முக்கியம். கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடுகிறது. எதுக்காகவோ அந்த சந்தோஷத்தை நாம விட்டுடுறோம். எந்த காரணத்துக்காகவும் அதை இழக்கக்கூடாது. சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் அல்ல. வீடு, பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்துடாது. மனதை எப்பவும் சந்தோஷமா வைத்துக்கொள்வதே ஒரு கலை. நிறைய படித்து, அறிவாளியா இருக்குற ஒருவர் எப்பவும் உர்ர்ர்னு யார்கிட்டயும் எதுவும் பேசாம இருந்தா அவரை யாரும் சீண்டக்கூட மாட்டாங்க. அதுவே எப்பவும் சிரிச்சிக்கிட்டே மகிழ்ச்சியாக இருக்குறவங்கக்கிட்ட காரணமே இல்லாம அவங்களை சுத்தி நிறைய பேர் சூழ்ந்திடுவாங்க. நாம வேலை செய்ற இடத்துல தொடங்கி எல்லா இடங்கள்லயும் சந்தோஷத்தை காட்டுறது ரொம்ப முக்கியம்.
யாரோடயும் யாரும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாம மன உளைச்சலை கொடுக்கும். நம்ம வாழ்க்கை நம்ம ஓட்டம்னு இருக்கணும். நம்ம வேலை நமக்கு பெஸ்ட்னு இருக்கணும். அதுல என்ன புது அனுபவம் கிடைத்ததுன்னு பார்க்கணும். எதிலும் தனித்து நிற்கணும். இங்கே போதும்னு லைஃப் கிடையாது. ரசிகர்கள் என் மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கீங்களோ அதே அளவுக்கு எனக்கும் உங்க மீது அக்கறை உண்டு. வயசு போய்க்கிட்டே இருக்கும். அதுக்குள்ள நல்ல உயரத்தை தொடணும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம்னு செய்ற என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் யாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது. இருக்க மாட்டீங்க. நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்" என்றார்.