தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக ‘அகரம்’ என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் படித்த பலர் மருத்துவராகவும், பொறியாளராகவும் முக்கிய இடங்களில் பணியாற்றிவருகின்றனர். அதில், மேஜர் டாக்டர் கிருஷ்ணவேணியும் ஒருவர். 7ஆம் வகுப்பு படிக்கும்போது தாய், தந்தையை இழந்த கிருஷ்ணவேணி, சிலரது உதவி மூலம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்றார். அதில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பில் நடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், 196.75 என்ற கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து நூலிழையில் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இதையடுத்து, சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் மூலம் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்ற கிருஷ்ணவேணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அவரது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் தற்போது இராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக கிருஷ்ணவேணி பணியாற்றிவருகிறார்.