அகரம் அறக்கட்டளையின் சார்பாக 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சூர்யா, “75இல் ஆரம்பித்தது. இப்போது 45 வருஷம் கடந்துவிட்டது. அகரம் கிட்டதட்ட 20 வருடங்களை நெருங்கப்போகிறது. 2006இல் ரொம்ப சாதரணமாக பேசினோம். அப்போது ஞானவேல் கேட்ட, ‘முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்க, தெரியுமா’ என்ற கேள்வி தான் அகரம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தது. இத்தனை வருஷம் கடந்தும் மாசத்துக்கு ரூ.3000 கூட சம்பாதிக்க முடியாத குடும்பங்கள் இருக்கிறது. அதிலிருந்து வரும் மாணவர்கள், நிறைய உழைப்பார்கள். அவர்களின் போர் குணங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.நாங்க இருக்கிற இடம் ரொம்ப வசதியானது. அப்படி இருந்துக் கொண்டு இந்த சாதனைகளை பண்ண 49 வயசாகிடுச்சு. ஆனால் எந்த வசதியும் இல்லாமல் 17 வயதில் மாணவர்கள் பண்ணியிருக்கும் சாதனை, எங்க சாதனையை விட மிகப் பெரியது. அந்த நம்பிக்கையோடு மாணவர்கள் பயணிக்க வேண்டும். இது எனது விருப்பம்.
இந்த விதை திட்டம் குறித்து உங்களுக்குத் தெரியும். அரசுப் பள்ளியில் படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் குறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர் தகுதியானவர் என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். அப்படி 10 ஆயிரம் கடிதங்கள் வரும். அதிலிருந்து நாங்கள் 1,500 எடுத்து அதில் 700, 500 ஆக மாறும். இந்த மாணவர்களுக்கு கல்வி கிடைத்துவிட வேண்டும் என நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள். கல்வி எல்லாத்தையும் மாற்றிவிடும் என நம்பும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விதை திட்டம் மூலம் 5000 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற முடிந்திருக்கிறது. இதில் 350 பல்கலைக்கழகம், 40 கல்லூரிகள் உதவி செய்திருக்கிறார்கள். அதே போல் அகரம் அறக்கட்டளையின் முன்னாள் மாணவர்கள் தான் தற்போது விதை திட்டத்தை முன்னெடுத்துப் போகிறார்கள். அவர்களும் தன்னார்வளர்களும் இல்லாமல் இந்த சாதனையை செய்திருக்க முடியாது. வாழ்க்கையில் நாம் நினைக்கும் எல்லா விஷயங்களும் சரியாக செல்லாது. அந்த நேரத்தில் பாசிட்டிவாக இருக்க வேண்டும். இப்படி நினைக்கும் அகரம் குழுமத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நான் ஸ்கூல் , காலேஜ் படிக்கும் போதும் அங்கு எதுவுமே சாதித்தது கிடையாது. 3 வருஷம் கார்மெண்ட் துறையில் வேலை பார்த்தேன். அதுவும் சலிப்பு தட்டியது. அப்புறம் படிச்ச படிப்புக்கும், பாக்குற வேலைக்கும் சம்மந்தமே இல்லை என சினிமாவில் நடிச்சேன். நேருக்கு நேர் ரிலிஸான பின்பு தான், மக்களின் அன்பு கிடைத்தது. அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று தான் ஆரம்பிச்சேன். அப்படி ஆரம்பிச்சு இந்த நிலமைக்கு என்னால் வர முடிந்தது. அதனால் சரியா சிந்தித்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஒன்னுமே இல்லாத நான், இவ்ளோ அன்பு கிடைக்கிற இடத்துக்கு வரமுடிந்திருக்கிறது. ஆனால் 17வயதிலே, நீங்கள் பெரிய சாதனை செய்துள்ளீர்கள். இதே வீரியத்தோடு சென்றால் உங்களின் எல்லை எங்கையோ இருக்கிறது. அதற்கு எதுவுமே தடை கிடையாது. பாசிட்டிவாக சிந்தியுங்கள். நிறைய நம்பிக்கை வையுங்கள். நிச்சயமாக சாதிக்க முடியும். அகரம் என்பது தொண்டு செய்வது கிடையாது, நம்முடைய பொறுப்பு” என்றார்.