தமிழ்த் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரை கௌரவிக்கும் விதமாக, ‘கலைஞர் 100’ விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ் குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, வடிவேலு, நயன்தாரா, நடிகை மற்றும் ஆந்திர அமைச்சரான ரோஜா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதில் சூர்யா பேசுகையில், “சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற ஒரு ட்ரெண்டை செட் பண்ணினது கலைஞர் ஐயா தான். அரசியலில் பல மாற்றங்கள் செய்திருக்கிறார். சொத்துகளில் பெண்களுக்கான சம உரிமை பங்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமை. அரசியலில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தபோதும் சினிமாவை கைவிடாம, கூடவே எடுத்து வந்திருக்கிறார். அதனாலேயே ஆசையாக மரியாதையாக கலைஞர் என்று கூப்பிடுறோம். முதலில் அவர் ஒரு படைப்பாளி. அப்படிப்பட்ட படைப்பாளிக்கு இந்த கலைத்துறை சார்பில் எல்லாரும் சேர்ந்து இந்த விழா எடுக்கிறது ரொம்ப முக்கியமான ஒன்று. கலைஞருக்கும் அவருடைய எழுது கோலுக்கும் என்னுடைய மரியாதைகள்” என்றார்.