சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. அதை நன்கு பராமரித்து வருகிறார்கள். அதேபோல் பல்வேறு கோயில்களுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று நடிகை ஜோதிகா கூறினார். ஜோதிகாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், சில தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில் ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
''திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரை பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கரோனா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது.
இஸ்லாமிய பெண்ணானவர், ஒரு இந்துவை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்-
அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம்.
ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த மாற்றமும் செய்யாமல் காதலுக்காக, காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர்.
ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது?
உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்ட்டட் இந்துவாகத்தானே இருக்கிறார்?
அவர் எப்படி ஒரு மதம் சார்ந்து பேசியிருக்கக்கூடும்?? அவரின் அடிப்படை மனிதத்தன்மையில் இருந்து யோசித்துப் பேசியதை நீங்கள் மத அடிப்படையில் எடுத்துக் கொண்டது உங்களின் அடிப்படைத் தவறு.
நீங்கள் யாரையாவது அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற இலக்கில் உள்ளதால் சிக்கியவர் யாராயிருந்தாலும் அடி என்ற வெறித்தனத்தில் அடித்துள்ளீர்கள்.
அவர் பேசியது உங்கள் மூளைக்கு உறைக்கவில்லையா? உங்கள் குழந்தைகளுக்காகவும்தான் பேசியிருக்கிறார்...
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..!"
என்ற பாரதியின் புதுமைப் பெண்ணாகத்தானே பேசியிருக்கிறார்?
எந்தக் கோவில்களைப் பற்றியும் அவதூறு செய்யாத அழுத்தமான தேவையான பேச்சு அது...
ஆனால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என்றால்... இவனுகளெல்லாம் கல்வி கற்று அறிவுக் கண் திறந்துவிட்டால் எங்கே நம் மத வியாபாரம் படுத்துவிடுமோன்னு பயம்!!??
கல்விதான் வருங்காலத் தலைமுறையின் விடியலுக்கான ஆயுதம். அந்த ஆயுதத்தை வலிமையானதாக உணர்ந்ததால்தான் திருமதி ஜோதிகா அதைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த ஆயுதத்தை மொன்னையாக்கியேத் தீருவோம் என்பது உங்கள் போராட்டம் என்றால் கல்வி எங்களின் தலைமுறைக்குத் தேவையான ஆயுதமாக அல்ல... பேராயுதமாகச் செய்வோம் என்பது தமிழர்கள் ஏற்கும் உறுதியாக இருக்க வேண்டும்.
கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளுக்கு கொண்டு கொட்டுவதைவிட கல்வியை இலவசமாகத் தர மதம் தாண்டி மனிதர்கள் முன் வரவேண்டும்.
கோவில்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் மூடிக்கிடக்கும் இவ்வேளையில்கூட உங்கள் மத அரசியல் எதை நிலை நிறுத்தப் போராடுகிறது...?
திருமதி. ஜோதிகா அவர்களின் பேச்சை நிதானமாகக் கவனியுங்கள். ஆழ்ந்து யோசியுங்கள். அவர் வேறு ஏதாவது ஒன்றிற்கு அந்தப் பணத்தைக் கொடுங்கள் என்று சொல்லியிருந்தால் நீங்கள் கொதிப்பதில் நியாயம் இருக்குன்னு கூட எடுத்துக்கலாம்.
கல்வி நிலையங்களுக்குத் தாருங்கள்னு கேட்டதைப் போய் இவ்வளவு மோசமான அரசியல் செய்கிறீர்களே? கொஞ்சமாவது நியாயம் இருக்கா இதில்? ?
நீங்கள் இப்படி வெறுப்பை உமிழ உமிழ, மத வெறியைக் கொட்டக் கொட்ட நாம் சார்ந்திருக்கும் மதத்தின் மீது நமக்கே வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடும் நண்பர்களே...!!
அவர்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை கல்விக்காக செலவு செய்துகொண்டிருப்பவர்கள்.
எத்தனையோ குடும்பங்களுக்குப் படிப்பின் மூலம் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருப்பவர்கள்.
அவர்கள் செய்வதை வைத்தாவது அவர்கள் மத நோக்கில் பேசியிருக்க மாட்டார்கள் என உணர வேண்டாமா?
திருமதி. ஜோதிகாவே இந்த சூழ்நிலையில்தான் தன் பிறப்பினை திரும்பிப் பார்த்திருக்கக்கூடும். "ஓ நாம் அங்கிருந்து வந்தவரோ" என்பதாக யோசித்துக் கலங்கியிருக்கக்கூடும். நமது நன்றிகெட்ட தனத்தை எண்ணி வெட்கியிருக்கக் கூடும்..
பாரதியின் வாக்கைப் பேசியுள்ளீர்கள் திருமதி ஜோதிகா அவர்களே!
துணிந்து நில்லுங்கள். தணிந்து மன்னிப்புக் கேட்டு உங்களை அசிங்கப்படுத்தி விடாதீர்கள்.
நாளைய தலைமுறையின் வாழ்த்துகளுக்காக இன்றைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும்... அசிங்கமான தூற்றல்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் படங்களில் பேசப்படும் பெண்ணியம் இங்கும் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.
உங்கள் பேச்சினைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ளும்வரைக் காத்திருங்கள்.
சமூக மாற்றங்கள் ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. அது படிப்படியாகக் கல்வியை பெற்றுக் கொள்வதில் இருக்கிறது என்ற உங்கள் கருத்தை, நான் சார்ந்துள்ள மதமாச்சர்யங்களைத் தாண்டி ஏற்றுக் கொள்கிறேன்.
யாவற்றையும் விட கல்வியே சிறந்தது. உங்கள் கல்விப் பணி தொடரட்டும்.
அன்புடன்
சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்'' என கூறியுள்ளார்.