மலையாளத்தில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதே ஆண்டில் பாஜகவில் இணைந்து தற்போது அதில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் கேரளா கோழிக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அங்கு இருந்த பெண் செய்தியாளர் ஒருவர், அவரை நோக்கி கேள்வி எழுப்ப, அந்த செய்தியாளர் தோளின் மீது கை வைத்து பதிலளித்தார் சுரேஷ் கோபி. உடனே அவரின் கையை தள்ளிவிட்டு பின் சென்ற செய்தியாளர் மீண்டும் முன்வந்து கேள்வி கேட்டார். மீண்டும் அவர் மீது கை வைத்து பதிலளித்தார் சுரேஷ் கோபி. பெண் செய்தியாளரிடம் சுரேஷ் கோபி அத்துமீறி நடந்து கொண்ட இந்த சம்பவம் சர்ச்சையானது. பல்வேறு தரப்பிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
மேலும் கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவித்தது. இதையடுத்து சுரேஷ் கோபி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "பெண் பத்திரிகையாளரிடம் நான் கரிசனத்துடன் நடந்து கொண்டேன். இதுநாள் வரை நான் பொது இடங்களிலோ வேறு இடங்களிலோ தகாத முறையில் நடந்து கொண்டதில்லை. இருப்பினும், அந்த சம்பவத்தின் போது பத்திரிகையாளர் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். என் செயலால் அவர் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.