தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் சுரேஷ் கோபி. இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் திரிச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அண்மையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, “சினிமாதான் என்னுடைய ஃபேஷன், சினிமா இல்லையென்றால் இறந்து விடுவேன். ‘ஒட்டக்கொம்பன்’ படத்தில் நடிக்க அமைச்சர் அமித்ஷாவிடம் அனுமதி கேட்டேன் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்” என்று கூறியதோடு “சினிமாவில் நடிக்கவிடாமல் அழுத்தம் கொடுத்தால் தனது இணையமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவும் தயாராக இருக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் சுரேஷ் கோபி தன்னுடைய பதவியைக் கூட துறக்கும் அளவிற்கு அவர் நேசித்து வரும் சினிமாத்துறையில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களைப் பற்றி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்கும். நீங்கள் ஏன் இது குறித்து கேட்குகிறீர்கள்? திரையுலகத்தை நிலை தடுமாற வைக்கிறீர்கள். ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது, அதை வைத்து பணம் சம்பாதிக்கிறீர்கள்” என்று கோபத்துடன் பேசினார்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு ரேவதி, மினுமுனீர், பெங்காலியைச் சேர்ந்த் ஸ்ரீலேகா மித்ரா உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளித்தனர். இதில் ஸ்ரீலேகா மித்ரா புகாருக்கு மலையாள இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு தொடர்ந்ததையடுத்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ப்ரித்வி ராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.