Skip to main content

கானா பாடகருக்கு சினிமா வாய்ப்பு, உறுதியளித்த ஷான் ரோல்டன்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
super singer senior 10 update

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், தற்போது துவங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள். இதில் மிக எளிய பின்னணியிலிருந்து வந்த கானா பாடகர் மணிகண்டன் எனும் கானா சேட்டு,  கடந்த  வாரம் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இறப்பு நிகழ்ச்சிகளில் கானா பாடியும், ஓட்டலில் சர்வராகவும் கனவைச் சுமந்து கொண்டு, வாழ்க்கையில் போராடி வரும் கானா சேட்டுவின் கதை, அனைவரையும் உருக வைத்தது. தனக்குப் பிறந்த மகன் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று, இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளதாக அவர் கூறியது அனைவரது கண்ணிலும் கண்ணீர் வர வைத்தது. 

ad

கடந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா சேட்டு, கானா பாடலில் வித்தியாசமாக, பக்திப்பாடல் ஒன்றை அற்புதமாகப் பாடி அனைவரையும் திரும்பி வைத்தார். அவரது பாடலைக் கேட்ட  நீதிபதிகள் அனைவரும் இணைந்து, கானா சேட்டின் குடும்பத்தை மேடையேற்றி அழகு பார்த்ததுடன், பரிசுகள் தந்து, அவரது மகனுக்கு தீட்சன் எனப் பெயரிட்டது, ஒரு நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்தது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தான் இசையமைக்கும் படத்தில் கானா சேட்டுக்கு பாடும் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். எதிர்பாராத இந்த சர்ப்ரைஸால் கானா சேட்டு  மகிழ்ச்சியோடு நன்றி கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மனோவை கொண்டாடிய சிறப்பு விருந்தினர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
super singer 10 mano special

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருடத் திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில்,  மனோ ஸ்பெஷல் சுற்று நடத்தப்பட்டது. இந்தியத் திரையிசையுலகில் 40 வருடங்களைக் கடந்திருக்கும் பாடகர் மனோ, இதுவரையிலும் 35000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்கள், முன்னணி நட்சத்திரங்கள், முன்னணி பாடகர்கள் என அனைத்து பிரபலமான கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார். 3000க்கும் மேற்பட்ட நேரடி மேடை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நீதிபதியாகவும் கலந்துகொண்டு,  பல அறிமுகப் பாடகர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார். 

இந்நிகழ்ச்சியில் மனோவை கௌரவிக்கும் விதமாக, அவருக்காகவே இசைத் துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உண்ணி மேனன், கல்பனா முதல் பல இசை மேதைகள் கலந்துகொண்டனர். மேலும் ஒரு சிறப்பாக இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாகக் கலந்துகொள்ளாத, மனோவின் நண்பர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மனோவின் பாடல்களைக் கொண்டாடும் விதமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முன்னாள் சீசன் 9 மற்றும் 10 போட்டியாளர்கள் இணைந்து, மனோவிற்காக ஒரு சிறப்பு சங்கீத நிகழ்வை அரங்கேற்றினார்கள். இந்நிகழ்வில் மனோவின் குடும்பத்திலிருந்து அவரது மகன், மனைவி உட்பட குடும்பத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்க முடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.

Next Story

சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த பாடகி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
super singer participation meets sivakarthikeyan

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த 10 வது சீசனில் பலதரப்பட்ட பின்னணியிலிருந்து பல பாடகர்கள் பங்கேற்றுள்ளனர். பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.  

ஆரம்ப கட்ட எபிஸோடு ஒன்றில் பங்கேற்ற, கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார், தற்போது இவர் தமிழில் எம்.ஏ பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். நிகழ்ச்சியில் இவரின் குரலும் பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.  

இவரின் ஆசையை நிகழ்ச்சி மூலம் அறிந்த சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்தார். இதன் வீடியோ பதிவு, இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்கான புரோமோ வீடியோவில்,  சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த தருணத்தை நம்ப முடியாத தன்ஷிரா, அவரை கண்ணீருடன் கட்டியணைத்துக் கொண்டார். அவருடன் உரையாடி மகிழ்வித்த சிவகார்த்திகேயன், இவர் என் சகோதரி பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சியின் நீதிபதிகளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.