நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த நடிகை சுனைனா, கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். இது குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள சுனைனா, "2 வார கால தனிமைப்படுத்தலுக்கு பிறகு கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளேன். நான் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, கரோனா பாதிப்பின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் நாட்டு மக்களுக்கு மன அழுத்தலிருந்து தளர்ச்சி அளிக்கவும் உதவும் என்று நம்புகிறேன். கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.