இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளானதோடு அமித்ஷாவின் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர் ரஹ்மான் ழகரம் தாங்கிய தமிழ் அன்னையின் புகைப்படத்தை பகிர்ந்தார். ஏ.ஆர் ரஹ்மானை தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிராக கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு பட விழாவில் 'இந்தி தேசிய மொழி இல்லை' என பேசியிருந்தார்.
இதனையடுத்து இந்திதான் நமது தேசிய மொழி என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதிவிட்டு மீண்டும் பரபரப்பைக் கிளப்பினார். இவரின் பதிவுக்கு பதிலளித்த நெட்டிசன்கள் இந்தியாவிற்கு தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது என்று கூறி வறுத்தெடுத்தனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற நடிகை கங்கண ரனாவத் இந்தி, ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது. அதனால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி எனக் பேசினார். இதையடுத்து அஜய் தேவ்கனின் லிஸ்டில் கங்கனாவையும் சேர்த்த இணையவாசிகள் பாரபட்சமின்றி வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில் நடிகை சுஹாசினி மணிரத்னம் இந்தி மொழி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " இந்தி ஒரு நல்ல மொழி. அதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.