பிரபல வானொலி தொகுப்பாளினியாகவும் பின்னணி பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவர் துணை நடிகர் கார்த்திக் குமாரை 2005ஆம் ஆண்டு, திருமணம் செய்துக் கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு பிரிந்தார். அதே ஆண்டு இவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கோலிவுட் நடிகர்கள் பார்டி செய்யும் புகைப்படங்கள் வெளியானது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்பு அதற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனச் சுசித்ரா தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவ்வப்போது நேர்காணலில் பல்வேறு அதிர்ச்சிக்குள்ளான தகவல்களைப் பகிர்ந்து வந்திருந்தார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு ஒரினச்சேர்க்கையாளர் எனக் கூறியிருந்தார். இது பரபரப்பை உண்டாக்க, தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் படமாட்டேன் எனக் கார்த்திக் குமார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கர்த்திக் குமார் சுசித்ராவிடம் பேசும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பட்டியலின பெண்கள் குறித்து சர்ச்சையாக அவர் பேசியது போல் இடம் பெற்றிருந்தது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவிக்க அந்த ஆடியோ, தான் பேசியதில்லை எனக் கார்த்திக் தெரிவித்திருந்தார். இதனிடையே அவர் மீது அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தேசிய பட்டியலின ஆணை இயக்குநர் ரவிவர்மன் உடனடியாக நடவடிக்கை எடுத்து சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி.க்கு, 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கடிதம் மூலம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் குமார், ஆடியோ விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் சுசித்ராவிற்கு தன்னைப் பற்றி பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து சுசித்ரா அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரியும் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.