வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சங்கத் தலைவன். இந்த படத்தை வெற்றிமாறன் தனது க்ராஸ்ரூட் கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார். எழுத்தாளர் பாரதிநாதன் எழுத்தில் உருவான தறியுடன் நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
மேலும் பிரபல தொகுப்பாளர் ரம்யா முதன்முறையாக ஹீரோயினாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பல வருடங்கள் கழித்து கருணாஸ் நடித்திருக்கிறார். அறம் படத்தில் நடித்து பிரபலமடைந்த சுனுலட்சுமி நடித்திருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் சமுத்திரக்கனி, வெற்றிமாறன், ரம்யா, கருணாஸ், வெற்றிமாறன், சுப்பிரமணியன் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய இயக்குனரும் நடிகருமான சுப்பிரமணியன் சிவா, "கம்யூனிஸ கொள்கை என்பது சினிமாவில் வெற்றிபெற்றுவிடும், ஆனால் பொதுவாழ்க்கையில் அது வெற்றி பெறாது. அப்படி இருக்கையில் சினிமாவில் வெற்றிபெறக்கூடிய கொள்கையை நண்பர் மணிமாறன் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதன் முதலில் இந்தியாவில் தொழிற்சங்கத்தை நிறுவிய சிங்காரவேலருடைய குடும்பம் இன்று ஏழ்மையில் இருக்கிறது. ஆனால், அவர்களை நாம் திரும்பி பார்ப்பதில்லை. இந்த பொருளாதார வாழ்க்கையில் அவர் அவரை காப்பாற்றிக்கொள்வதே பெரிது என்ற கொள்கையை வைத்திருப்பதால், நமக்காக நம் சமூதாயத்திற்காக பாடுபட்டவர்களை பார்ப்பது கிடையாது. இனிமேலாவது நாம் அனைவரும் நன்றிக்கடனுடன் இருப்போம்” என்று பேசி முடித்தார்.
அவரை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் மணிமாறன் பேசினார். அப்போது, “சினிமாவில் மூன்று மணிநேர போராட்டம் என்பது போலி போராட்டம். இதுவரை வரலாற்றில் நாம் அனைத்தையும் போராடிதான் பெற்றிருக்கிறோம். அதனால் அவருடைய கருத்தை மாற்றிக்கொள்வார் என்று நினைக்கிறேன்” என்றார்.
உடனடியாக அதற்கு பதிலடி தரும் வகையில் சுப்பிரமணியன் சிவா, “ இந்த கொள்கையை தொடங்கியது காரல் மார்க்ஸ். ஆனால், அவருடைய சாவிற்கே பத்து பேர் தான் போனார்கள். உலகத்திற்கே போராடக்கூடியவர்கள் அனைவரும் ஐம்பது ரூபாய்க்கும் நூறு ரூபாய்க்கும் உண்டியல் குலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். அந்நேரத்தில் சுப்பிரமணியன் சாமியின் பேச்சுக்கு கீழே சலசலப்பு ஏற்பட்டது.