பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ‘கொம்பன்’, ‘சிங்கம்’, ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் கடைசியாக இயக்குநர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த ‘டெடி’ படத்தைத் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபு தேவா நடித்துள்ள ‘தேள்’ படத்தை தயரித்துள்ளது. இப்படம் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஃபைனலி யூடியூப் சேனலுடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் கால்பதிக்க உள்ளது. இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா கூறுகையில், "டிஜிட்டல் தளம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துவருவதால், இந்த டிஜிட்டல் உலகத்திற்குள் நாங்களும் ஒரு பயணத்தைத் தொடங்க விரும்பினோம். இந்த நோக்கத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களைத் தனித்துவமான பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை மிளிரும் கதைகளுடன் மகிழ்வித்துவரும் ஃபைனலி போன்ற சூப்பர் லீக் சேனலுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஃபைனலி யூடியூப் சேனல் நிறுவனத்தின் தலைவர் பரத், "இது மாதிரியான நிகழ்வு தமிழகத்தில் இதுவே முதல்முறை என்பதால் ஃபைனலி குழுவில் உள்ள எங்கள் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம் ஆகும். ஒரு தயாரிப்பு நிறுவனம் யூடியூப் சேனலுடன் இணைகிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் ஃபைனலி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் எதிர்காலத்தில் இனி டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் கூட்டாகச் செயல்படும்” எனத் தெரிவித்தார். மேலும், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து திரைப்படங்களுக்கான ஓடிடி தளத்தை உருவாக்கவுள்ளதாகவும் கூறினார்.