சமீபத்தில் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் பற்றி பேசினதும், அதற்கு துரைமுருகன் பதிலடி கொடுத்ததும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. ரஜினிகாந்த் பேசியதாவது, “பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் பிரச்சினை. இங்கு அப்படி பலர் உள்ளனர். அவர்கள் எல்லாம் நல்ல ரேங்க் எடுத்தும் கிளாஸைவிட்டு செல்லமாட்டோம் என உட்கார்ந்து கொண்டு உள்ளனர். அவர்களை சமாளிப்பது கடினம். இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியவர்...” என்று அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் துரைமுருகன், “அதே மாதிரிதாங்க. மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்த்து நடிக்கின்றனர். வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதையெல்லாம் மறந்துட்டு ஏதோ ஒண்ணு பேசுறாரு” என்று ஒரு பேட்டியில் பதிலடி கொடுத்திருந்தார். பின்பு ரஜினி, “அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது” என்று செய்தியாளர்கள் முன் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் துரைமுருகனும், “நகைச்சுவையை பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் நண்பர்களாகவே இருப்போம்” என்று பேசினார்.
இந்த நிலையில் ரஜினி பேசியது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தனது கருத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “ரஜினிகாந்த் வயதானவர். அவர் இளையவராக நடித்தால் தான் அது நடிப்பு. ஆனால் அரசியல்வாதிகள் வயதானாலும் அவர்களின் கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம். அது மக்களுக்கு நல்லதாக அமையும். அது போலத்தான் கலைஞர் 93 வயது வரை வாழ்ந்து அவரது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்” என்றார்.