தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66 வது கூட்டம் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் கருணாஸ், கார்த்தி, விஷால் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விருது கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிகாந்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்விற்கு நேரில் வரவில்லை என்றாலும் காணொளி மூலம் நடிகர் சங்கத்திற்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதனையடுத்து நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது, "3 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்க கட்டிடம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை ரூ.19 கோடியே 50 லட்சம் செலவாகியுள்ளது. கம்பி, சிமெண்ட், மணல் ஆகியவற்றின் விலை தற்போது இரட்டிப்பாகி உள்ளதால் நடிகர் சங்க கட்டடத்தின் மீதமுள்ள 30 சதவீத பணிகளை முடிக்க மேலும் ரூ.30 கோடி தேவைப்படுகிறது. அந்த நிதியை எப்படி பெற வேண்டும் என சங்கத்தில் ஆலோசித்தோம். இறுதியில் வங்கியில் கடன் பெற பொதுக்குழுவில் அனுமதி வங்கியுள்ளோம். கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து அதில் வரும் ஊதியத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவி உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.