உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 19,700 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை நெருங்கியுள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் அதிகம் பரவாததுபோல இருந்த கரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் 649 பேர். இதுவரை 13 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் மற்றும் 43 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்திய பிரதமர் அமல்படுத்தியுள்ளார். அவசிய தேவையின்றி வீட்டைவிட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அரசாங்கத்தின் உத்தரவை மீறியும் வெளியே வருகின்றனர்.
இதனிடையே தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், “வீட்டைவிட்டு வெளியே மக்கள் வந்தால் பார்த்த இடத்திலேயே சுட வேண்டும்” என்று ஆவேசமாக பேசினார். இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த நடிகை சோனம் கபூர் அதனுடன், “எனக்கு குழப்பமாக இருக்கிறது. இது சரியானதா?” என்று பதிவிட்டுள்ளார்.