
விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “பொழுதுபோக்கு என்பது பல வகையில் இருக்கும். ஜாலியாக சிரிக்க வைப்பது ஒரு பொழுதுபோக்கு. அந்தப் படத்திற்கும் பெரும் வரவேற்பு இருக்கும். 'பிதாமகன்', 'சேது' போன்ற படங்களுக்கும் பெரும் வரவேற்பு இருக்கும். ஜி. வி. பிரகாஷ் சொன்னது போல் 'அசுரன்' போன்ற படத்திற்கும் வரவேற்பு இருக்கும். இந்தப் படம் 'டிபிகல்'லான அருண்குமாருடைய படம். அருண்குமார் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ரசிகர். ஒரு ஆங்கில தரத்தில்.. தமிழ் மண்ணில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம் இந்தப் படம். மிக அற்புதமான படம். இந்த படத்தில் நடிக்கும் போது மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தில் நீங்கள் புது எஸ் ஜே சூர்யாவை பார்ப்பீர்கள்.
நான் எப்போதும் என்னை இயக்குநர்களிடம் ஒப்படைத்து விடுவேன் . அவர்களுக்கு என்ன தேவையோ. அதை நான் அப்படியே கொடுத்து விடுவேன். 'இறைவி'யில் ஆரம்பித்த அந்தப் பயணம்.. இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறது. குணச்சித்திர நடிகர் என்பது ஒரு ரூட். நான் கதையின் நாயகன், எதிர் நாயகன்... ஆனால் நாயகன். விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. அவர் தமிழ் சினிமாவின் கௌரவம். மிகச் சிறந்த நட்சத்திர நடிகர். இந்தப் படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார். வீரதீர சூரன் வெற்றிவாகை சூடும். இப்படத்தில் நான் டப்பிங் பேசிய விதத்தை ஃபோனில் அழைத்து ஒரு மணி நேரம் விக்ரம் என்னை பாராட்டினார். இது இந்தப் படத்தில் நான் நடித்ததற்காக கிடைத்த முதல் விருது. இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.