விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டிஎஸ்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'அதிருதா மாமே' வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட நிலையில், எஸ்.ஜே. சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "நீங்கள் நல்லா படிச்சு உலகத்துக்கு நல்ல சேவை செய்ய வேண்டும். எங்க வீட்டிலும் 3 டாக்டர்ஸ் இருக்காங்க. அதனால் அது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். கண்டிப்பாக அது ஈஸியான விஷயம் கிடையாது. எதிர்காலத்தில் ஏஐ போன்ற அறிவியல் ரீதியான தொழில்நுட்பம் வரப்போகிறது. அதே சமயம் போதைப்பொருள் விஷயங்களும் அதிகமாக இருக்கிறது. அதனால் அனைவரும் சுய ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும்" என்றார்.