2018ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா மீது மகேஷ் சந்திர மிஷ்ரா என்பவர் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ. 5000 பிணைத் தொகை செலுத்தி 2022ல் வெளிவந்தார். இந்த வழக்கு 7 வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. கடைசியாக கடந்த 21ஆம் தேதி நடந்த விசாரணையில் ராம் கோபால் வர்மா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் தற்போது ராம் கோபால் வர்மா குற்றவாளி எனக் கருதி அந்தேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரருக்கு ரூ.3.72 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராம் கோபால் வர்மா, “என்னைப் பற்றியும் அந்தேரி நீதிமன்றம் பற்றியும் வந்த செய்திகளைப் பொறுத்தவரை, அது எனது முன்னாள் ஊழியர் தொடர்பான 7 வருடங்களாக நடைபெற்று வரும் ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் தொகை தொடர்பான வழக்கு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது வழக்கறிஞர்கள் அதை விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் மேற்கொண்டு எதுவும் கூற முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.