கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்தோ அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சினிமா துறையில் சிறந்த கலைஞர்கள் மற்றும் சிறந்த படைப்புகளுக்கு இவ்விழாவில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான 19 வது சென்னை சர்வதேச திரைப்படவிழா கடந்த 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அந்த நிகழ்வு நேற்றுடன்(6.1.2022) நிறைவடைந்தது. இதில் 53 நாடுகளில் இருந்து 100 க்கு மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.
இவ்விழாவில், தமிழ் பிரிவில் சிறந்த படங்களுக்கான போட்டியில் கர்ணன், தேன், சேத்துமான், உடன்பிறப்பு, சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாளும், மாறா உள்ளிட்ட 11 படங்கள் இடம் பெற்றது. இதில் சிறந்த படங்களுக்கான முதல் பரிசு சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பரிசுத் தொகையான ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசுக்கு தேன் மற்றும் சேத்துமான் ஆகிய இரு படங்களும் தேர்வு செய்யப்பட்டு தல ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுக்கும், அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது பாடகர் சித் ஸ்ரீராமுக்கும் வழங்கப்பட்டது. அத்துடன் 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' படத்தில் நடித்த லட்சுமி பிரியாவுக்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது.