திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி 150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர் நெல் ஜெயராமன். மேலும் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கியதற்காக இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் அப்போல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை நடிகர்கள் கார்த்தி, சூரி, மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை அப்போலோவில் சேர்த்து மொத்த செலவையும் பார்த்த சிவகார்த்திகேயனை நேரில் சந்திக்க விரும்பியதாக கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் சரவணனிடம் நெல் ஜெயராமன் கூறியிருக்கிறார். இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயராமனை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இதை இயக்குனர் சரவணன் தனது ட்விட்டர் பக்த்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில்... “என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்” என்றார் நெல் ஜெயராமன். தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் “நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை” என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் இந்த பதிலைக் கேட்டு கண்கலங்கியுள்ளார் நெல் ஜெயராமன். இந்த பதிவு தற்போது வைரலாகி சிவகார்த்தியேகனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.