
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான சிவகார்த்திகேயன், பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி, சின்னத்திரை நடிகர் ரியோ மூவரும் தமது பிறந்தநாளை இன்று (17.02.2021) கொண்டாடுகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகிய சிவகார்த்திகேயன், அந்த சீசனுக்கான டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார். அதன் பிறகு, நிகழ்ச்சி தொகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சிவகார்த்திகேயனுக்கு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மெரினா' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவையான கிண்டல் பேச்சுகள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த சிவகார்த்திகேயனுக்கு, அவர் நடித்த அடுத்தடுத்த படங்களும் கைகொடுக்க, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு இன்று உயர்ந்துள்ளார்.
டிடி என அறியப்படும் திவ்யதர்ஷினி, 1999-ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'உங்கள் தீர்ப்பு' நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர், அவர் தொகுத்து வழங்கிய ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘காஃபி வித் டிடி’, ‘அன்புடன் டிடி’ ஆகிய நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவை. சிம்பு நடுவராக கலந்துகொண்ட 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியில் இருந்து டிடி என சுருக்கமாக அழைக்கப்பட்டார், திவ்யதர்ஷினி. சின்னத்திரையில் முத்திரை பதித்த டிடி, தற்போது வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சின்னத்திரை நடிகரான ரியோ ராஜ், 2011-ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' என்ற தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். பின், 'சரவணன் மீனாட்சி' தொடரின் மூன்றாவது சீசனில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தார். தற்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர், வெள்ளித்திரை நடிகர் என பிஸியான ஆர்டிஸ்ட்டாக வலம் வருகிறார்.
இன்று புகழ் வெளிச்சத்தில் உள்ள இந்த மூவருமே விஜய் தொலைக்காட்சியில் தங்கள் கேரியரைத் தொடங்கியவர்கள். இது, இவர்கள் மூவருக்கும் இடையேயான ஒற்றுமையாகப் பார்க்கப்படுகிறது. இதைவிடப் பெரிய ஒற்றுமை, இவர்கள் மூவரும் ஒரே நாளில் (பிப்ரவரி 17) பிறந்துள்ளனர் என்பதாகும். இன்று காலையிலிருந்தே இம்மூவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.